Monday 18 March 2013

ஈழம்!

இலங்கை தமிழர் நலன் கருதி நடக்கும் உண்ணாவிரதம் தற்சமயம் கலை கல்லூரி மாணவர்களால் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.. பொறியியல் மாணவர்களையும் பங்கு பெற சொல்லி எங்கும் தீவிர பிரசாரம் நடக்கிறது..

இந்த விஷயத்தை அரசியல், மனித நேயம் இந்த இரு வட்டத்துக்குள் மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை.. தனி மனிதர்களாக ஒவ்வொரு தமிழனும் செய்த தவறு தான் இன்று ஈழத்தின் நிலைக்கு காரணம்.. ஏதோ ஒரு விதத்தில் நீங்களும், நானும் பிரபாகரன், பாலச்சந்திரன் மற்றும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் கொலைக்கு காரணமாய் உள்ளோம்..

இராஜபக்சே விருந்தினராக திருப்பதி சென்ற போது நாம் எந்த கிளர்ச்சியும் காட்டவில்லை .. பிரபாகரன் தாயார் ஒரு சிகிச்சைக்காக இங்கு வந்து திருப்பி அனுப்பப்பட்ட போது நாம் எதுவும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.. மில்லியன் கணக்கான மக்கள் 2010, 2011ல் கொல்லப்பட்டனர். அப்போதும் எந்த தீவிர போராட்டமும் நடக்கவில்லை.. பல ஆண்கள் நிர்வாணமாக சுட்டு கொல்லப்பட்டனர்.. அதை வீடியோவாகவும் பார்த்தோம்.. அப்போதும் எதுவும் செய்யவில்லை.. மொத்தத்தில் நாம் தேவைப்படும் போது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யவில்லை ..

இப்போது வெறும் உணர்ச்சிகரமான பிரச்சனையாக இதை பார்த்தல் சரி தானா? ஆட்சி மாற்றம் இலங்கையில் வருவதற்கு முன், இந்தியாவில் அல்லவா வர வேண்டும்?.. ஏதோ ஒரு அரசியல் ஆதாயம் இங்கு ஆட்சியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் உள்ளது.. இல்லையென்றால் கோடி மக்கள் கொல்லப்படும் போது ஒரு நாடே வேடிக்கை பார்த்திருக்காது..

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் குட்டிமணி, ஜெகன் இலங்கையில் கொல்லப்பட்ட போது இங்கு ஒரு மாபெரும் கிளர்ச்சி நடந்தது.. நாம் சற்று கத்தி பின் ஓய்ந்தோம்.. இப்போது மீண்டும் அதே கதை நிகழ்கிறது..

உண்ணாவிரதம் இருபவர்களின் நோக்கம் தூய்மையானது.. அதை வரவேற்கிறேன்.. நம் போராட்ட முறை இந்த பிரச்சனைக்கு ஏற்றதா? இதுவே என் கேள்வி..

இது போன்ற சூழ்நிலையில் போராட்டதிற்கு எதிரான கேள்விகளை வைத்தால் "உனக்கு தமிழ் உணர்வு இல்லை.. இன உணர்வு இல்லை.. உன் குடும்பத்திற்கு இது நடந்தால் தெரியும்..:" என்று உணர்ச்சிவசப்பட தொடங்கிவிடுகிறார்கள்.. அதனால் ஒன்று "போராடு" இல்லை "சும்மா இரு" என இரண்டே கட்டத்துக்குள் தள்ளி விடுகிறார்கள்..

தற்போது இருக்கும் சொச்சம் தமிழர்களை முழுமையாக இங்கு அழைத்து வரலாம்.. ஏனெனில் சத்தம் இல்லாமல் பல சித்ரவதைகளை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.. ஆனால் அவர்கள் காப்பாற்றப்படுவதற்கு ராஜபக்சேயோ, மன்மோகனோ செவி சாய்க்க வேண்டும்..

அது நடக்கும் காரியமா என்பது தேவனுக்கே வெளிச்சம்.. 

தமிழீழ பிரச்சனை குறித்து இன்று எனது கல்லூரி மாணவர்களும் போராட்டம் செய்ய இருப்பதாக கேள்வி..

எளிதாக மாறும், உணர்ச்சிவசப்பட கூடிய மனநிலை உடைய பிரிவில் மாணவர்களும் உண்டு.. அவர்கள் "Emotional Intteligent" ஆக செயல்படுவது இல்லை.. இது இந்த விஷயத்தில் மட்டும் அல்ல.. பல கல்லூரி உள்விவகாரங்களில் கூட நான் பார்த்ததே.. அரசையோ, கல்லூரி நிர்வாகத்தையோ எதிர்க்கும் மனப்பான்மைக்கு எப்போதும் பல மாணவர்கள் தயாராக உள்ளனர்.. பற்ற வைத்தவுடன் கொளுத்த நினைக்கிறார்கள்..

போராட்டத்தின் விளைவுகள் நல்ல முடிவோ, இதே நிலையோ எதை தந்தாலும், போராட்டம் செல்லும் வழியில் எனக்கு உடன்பாடு இல்லை.. குறிப்பாக நேற்று நடந்த பல சம்பவங்கள் அதிர்ச்சி தருபவை..

சென்னை வந்த புத்த பிட்சுக்கள் அடித்து காயப்படுத்தப்பட்டது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.. தவறு செய்யாத தமிழ் மக்கள் அங்கு துன்புறுத்தப்பட்டது உண்மை.. அதன் பழியை இங்கு கழுவுவதா? சிங்களர்கள் அனைவரையும் ராஜபக்சே என நினைக்கும் மனநிலை பரவியுள்ளது..

மேலும் மதுரையில் ஒரு மாணவர் தீக்குளித்து இறந்ததாய் அறிந்தேன்.. இதன் நோக்கம் என்ன? பல மாணவர்களின் முகநூல் பதிவில் ராஜபக்சே கொடூரமாக கொல்லப்பட வேண்டும் என பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.. பொதுவாக இந்த எண்ணம் தான் தமிழர்களிடம் மேலோங்கி உள்ளது.. தற்சமயம் இந்த ஈழ பிரச்சனை பெரும் உருவம் எடுக்க காரணம் பாலச்சந்திரன் மரணம்.. ஆக ஒரு உயிரை கொன்றதற்கு, இன்னொரு உயிர் பலி வேண்டும்.. அதை நிறைவேற்ற மற்றொரு உயிர் தன்னை அழித்துக்கொள்கிறது..

நாளை வரப்போகும் எந்த நல்ல தீர்வுக்கும் ஒரு தீக்குளிப்பு தான் விதையாக இருக்குமென்றால் அதற்கு ஜனநாயகமும், அமைச்சர்களும் தேவை இல்லை.. சுதந்திர உலகத்தில், இந்தியா போன்ற சுதந்திர தேசத்தில் உயிர் பலியிட்டு உரிமையை மீட்க தேவையில்லை..

நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய ஒரு ஈழத்தமிழ் பெண் கூறியது, "தமிழர்கள் இங்கு செய்யும் ஒவ்வொரு போராட்டத்திற்கும், இங்கு நாங்கள் பாதிக்கப்படுவோம்.. நாங்கள் இப்போது தான் மீண்டு வருகிறோம்.. மீண்டும் ஒரு போரையோ, தாக்குதலையோ எங்களால் தாங்க முடியாது.." இதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.. தமிழர்களை அங்கு வைத்துகொண்டு நாம் இங்கு இலங்கையை எதிர்த்து தீவிர வன்முறைகளில் ஈடுபடுவது எவ்வளவு தூரம் நன்மை தரும் என்று தெரியவில்லை..

கல்லூரிகள் அவசரமாக காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்ட பின் போராடுவது அரசை எதிர்க்கும் போக்கென கொள்ளப்படும்.. முகநூலும், மீடியாவும் தூண்டிவிடும் போது மாணவர்கள் மிக வேகமாக, உணர்ச்சிவசப்பட்டு செயல்படுதல் சரியல்ல..

காலம் தாழ்த்தி நடத்தப்படும் இந்த போராட்டம் முறையான வழியில் நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.. அது மட்டுமே தீவிர மாற்றத்தை தரும்.. வன்முறைக்கு பதில் வன்முறை அல்ல..