Wednesday 8 May 2013

ஜெயமோகனுடன் ஒரு நாள்..

ஜெயமோகனை ஏப்ரல் 28 அன்று திருச்சியில் சந்தித்தேன். என்னை போல 20 பேர் வந்திருந்தனர். தீவிர இலக்கியம் படித்த, அறிந்த மக்கள் நிறைந்த அந்த அறையில் ஜெயமோகன் சாருடன் ஒரு நாள் முழுக்க உரையாடியது ஒரு அற்புதமான அனுபவம்.
                                              


கற்பனையில் இருந்த ஜெயமோகனுக்கும், நேரில் பார்த்த ஜெயமோகனுக்கும் பலத்த வேறுபாடு இருந்தது. மிக இயல்பாக இருந்தார். இவரா "ஓலைச்சிலுவை, அம்மையப்பம்" போன்ற தீவிர படைப்புகளை தருகிறார் என்று தோன்றியது. வாசகனை இயல்பாக உணர வைக்கும் உரையாடல் தான் அவரிடம் நான் மிகவும் ரசித்தது. அறையில் நுழைந்து பெயரை சொன்னதும், "ஸ்ரீகாந்த், கார்த்திக் போன்ற பெயரில் பலர் உள்ளனர்." என்று சிரித்தார். மதியத்திற்குள் அங்கே நான்கு கார்த்திக் வந்துவிட்டார்கள்.

கன்னியாகுமரி, நாகர்கோவில், கேரளா வரலாறு சன்னமாக இவருக்கு தெரிந்திருக்கிறது. கோவில்கள் பராமரிக்காமல் கிடப்பது, ஏரிகள் சீரழிக்க படுவது என பல்வேறு தளங்களில் பேச முடிகிறது. மது கேரளாவையும், தமிழகத்தையும் அழித்து வருவதை இவர் விரும்பவில்லை.

"பல கதைகளில் அறம் குறித்தும், அறம் சார்ந்தும் எழுதியுள்ளீர்கள். அறம் என்றால் என்ன?" என்ற கேட்டதற்கு, "ஒரு எழுத்தாளனிடம் அவன் படைப்பை விளக்க சொல்லக்கூடாது. அது தான் முதல் அறம்.." என்று நகைச்சுவையாக தொடங்கி வெகு தீவிரமாக விளக்கம் தந்தார். வியக்க வைக்கும் செய்திகள்..

கடல் படத்தில் Father சாமை முதல்முறை தேவாலயத்துக்கு அழைத்து செல்லும் காட்சியில், கோவில்குட்டி ஓஓஓஓ என்று கத்துவான். உடனே தேவாலயத்தின் உள்ளிருந்து பல நாய்கள் வெளியே வரும். அந்த காட்சியில் முதலில் கோவில்குட்டி "அல்லேலுயா.. அல்லேலுயா.." என்று கத்துவதாக தான் எழுதப்பட்டது. அதாவது அவனுக்கு சர்வமும் கர்த்தரே என்ற நோக்கில். ஆனால் சென்சார் சொன்னதனால் ஓஓ என்று கத்துவதாக மாற்றப்பட்டது.
                                            

கடல் முதலில் 200 பக்க நாவலாக ஜெயமோகனால் எழுதப்பட்டது. படம் வெளிவந்த பின் நாவல் வெளிவரும் என்று முன்பு சொல்லியிருந்தார். அதுபற்றி கேட்ட போது, "நாவலை இப்போது வெளியிட்டால் பலரும் நாவலுக்கும், சினிமாவுக்கும் உள்ள வேறுபாடுகளை அலச ஆரம்பிப்பார்கள். மணிரத்னத்திற்கு தேவை இல்லாத தொல்லை ஆகும். அதனால் அந்த முடிவை சற்று ஒத்தி வைத்துள்ளேன்." என்றார்.

மணிரத்னம் நாத்தீகர். அவரது படங்களில் மதம் சார்ந்த விஷயங்கள் இத்தனை அழுத்தமாக வந்தது கடலில் தான். இதை ஏற்று கொள்வதில் அவரை இத்தனை நாள் பின்பற்றி வந்தவர்களுக்கு பிரச்சனை இருக்கலாம் என்றதற்கு, "கடல் மணிரத்னம் கதை அல்ல. ஜெயமோகன் கதை. அதன் தொடக்கம் முதல் முடிவு வரை என் படைப்பே." என்றார்.

கடல் மேல் போடப்பட வழக்குகள் குறித்து கேட்டபோது.. "கடல் படம் தீவிர கிறிஸ்துவத்தை எந்த விதத்திலும் புண்படுத்தாமல் எழுதப்பட்டது. பெர்க்மான்ஸ் என்பது ஒரு புனிதரின் பெயர். அதை வில்லனுக்கு சூட்டியுள்ளனர் என்று கேஸ் போடுகிறார்கள். இது அபத்தம். பெயர் வைப்பது கதை எழுதுபவனின் உரிமை. மேலும் சென்சார் போர்டிலும் பல அரசியல் உள்ளது. பாலாவின் பரதேசியில் வெள்ளைகார கிறிஸ்துவ பெண்ணின் பின் நாக்கை தொங்க போட்டு நம் மக்கள் அலையும் காட்சி யாரையும் புண்படுத்தவில்லையா? சிறு சிறு குழுக்கள் தாங்கள் தான் கிறிஸ்துவ மதத்திற்காக போராடுகிறோம் என்று காட்டவே இவ்வாறு கேஸ் போடுகின்றனர். இறுதியில் மணிரத்னம் அந்த அமைப்புகளுக்கு பணம் கொடுத்தே சரி செய்தார். சினிமாவில் சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகாவிட்டால் நஷ்டம் தான்." என்றார் ஜெயமோகன்.

சினிமாவில் ஜெயமோகனை இங்க்மார் மற்றும் அகிரா குரோசவா பெரிதும் பாதித்துள்ளனர். தமிழ் சினிமா மீது வருத்தம் தான். பாலு மகேந்திராவின் 'வீடு', மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' எதுவும் நல்ல சினிமா அல்ல என்றார். சினிமாவிற்கு ஒரு purpose வேண்டும். உதிரி உதிரியாய் எடுக்கும் சினிமா எப்படி நல்ல படம் ஆகும் என்று கேட்டார். ஜெயகாந்தன் இயக்கிய ஆரம்ப கால படங்கள் தமிழில் ஒரு புதிய அலைக்கு ஆரம்பமானது. ஆனால் அது தொடரவில்லை. "நடுவுல கொஞ்சம் பக்கத காணும்" போன்ற படங்களை நல்ல படம் என்று சொல்லும் நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டுள்ளது என்றார்.

விடைபெறும் போது அவரிடம் கையெழுத்து வாங்க அவரது புத்தகம் எதுவும் என்னிடம் இல்லை. எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் "Conversations with Mani Ratnam" என்று கொடுத்தேன். சிரித்து கொண்டே கையெழுத்திட்டார். "நல்ல புத்தகம்.. மிகவும் நேர்மையாக மணிரத்னம் பதில் அளித்துள்ளார்.." என்று பாராட்டினார். "என் பையன் அஜிதன் போல மிக மெலிதாக இருக்கிறீர்கள். உடல்நலத்தை கவனியுங்கள்" என்று கூறினார்.
                                                         
                 
தீவிர இலக்கியம் மேல் மெல்ல மெல்ல ஈடுபாடு வர தொடங்கும் நேரத்தில் ஜெயமோகன் போன்ற ஒரு மிக பெரிய ஆளுமையை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். அவர் படைப்பை ரசிக்கும் முன், அவருக்கு ரசிகன் ஆகிவிட்டேன்.