Monday 1 April 2013

கடல்

கடல் படத்தின் நஷ்டத்தை கண்டு கொந்தளித்து ஆளாளுக்கு தங்கள் வலைத்தளத்தில் எழுதி ஜெயமோகன் மற்றும் மணிரத்னத்தின் மீதுள்ள கோபத்தை தீர்த்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த நாலாந்தர விமர்சனங்களை படித்த எனது சில எண்ணங்கள்..

கடல் படத்தை ஜெயமோகன் எழுதினார்.. மணிரத்னம் இயக்கினார்.. படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது.. இது குறித்து கவலை பட வேண்டியது விநியோகஸ்தர்கள்.. ஒரு சராசரி ரசிகனுக்கு படத்தின் கலை மட்டுமே திருப்தி அளிக்க வேண்டும்.. அதன் வசூல் அல்ல.. ஹலோ தமிழ்சினிமா என்ற ஒரு தளத்தில் மணிரத்னத்திற்கு உலக சினிமா தெரியாது என்று எழுதியுள்ளனர். (எழுதியவருக்கு தெரியுமோ என்று தெரியாது.) உலக சினிமா தெரியாத ஒரு இயக்குனருக்கு வெனிஸ் திரைப்பட திருவிழாவில் "Glory to the Filmmaker" விருது வழங்குகின்றனரா? பெர்லின் திரை திருவிழாவில் இருவர் படம் சிறந்த படமாக தேர்வானது.. ஆனால் இந்த ஹலோ தளம் "இருவர் ஒரு flop.. அதை போல் கடலும் flop.." என்று எழுதியுள்ளது..

கலையை ஒரு துளி கூட கலை என பார்க்காமல் வெறும் வியாபாரமாக பார்க்கும் இது போன்ற கிருமிகள் இப்போது இணையம் எங்கும் வியாபித்து உள்ளன.. ஜிம்பாப்வே, லாஸ் ஏஞ்சல்ஸ் என உலகெங்கும் விருதுகள் பெற்ற படங்கள் மணிரத்னம் எடுத்தவை.. அது பற்றி அவர் பெருமையாக பேசியது இல்லை.. ஆனால் இந்த தன்னார்வ விமர்சகர்களின் நோக்கம் மணிரத்னத்தின் புகழை மறைத்து அவர் ஒரு சாதாரண இயக்குனர்.. அவரது வெற்றிகள் அதிர்ஷ்டம் என்றும், தோல்விகள் அவரால் ஏற்பட்டவை என்றும் காட்ட நினைக்கிறார்கள்.. சூரியனை நோக்கி கையை நீட்டி சூரியன் மறைந்துவிட்டதே என்று சொல்லும் ஒரு வகை மன திருப்தி பெறுகிறார்கள்..

இன்னும் சிலர் திரிகிறார்கள்.. மணிரத்னம் ரஹ்மானை அறிமுகப்படுத்தினார்.. அதன் மூலம் ராஜாவின் புகழ் மெல்ல மெல்ல சரிய தொடங்கியது.. இந்த காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு இசை அமைக்கும் ரஹ்மான் முன்  தங்கள் ஆதர்ச இசையமைப்பாளர் படங்கள் பேசப்படுவதில்லையே என்ற ஆழமான எண்ணம் இவர்களை இசையை இசையாக கேட்க விடுவதில்லை.. ரஹ்மானின் மிக சிறந்த பாடல்களை கூட சலிப்புடன் நிராகரிப்பார்கள்.. இந்த காழ்ப்புணர்ச்சியின் நீட்சியே ரஹ்மானை அறிமுகம் செய்த மணிரத்னத்தின் மீது வைக்கும் அபத்த குற்றச்சாட்டுகளுக்கு காரணம்..

கடல் :: பாவத்துக்கும், மீட்புக்கும் இடையே அலையும் இளைஞனின் கதையென பார்க்காமல் வெறும் ஹீரோ - வில்லன் என்ற ரீதியில் பார்க்கவே இவர்கள் பழகி உள்ளனர்.. படத்தின் படிமங்கள் இவர்களுக்கு புரிவதில்லை.. புரிய இவர்கள் முனைவது கூட இல்லை.. இவர்கள் உள்நோக்கம் படத்தை கடுமையாக விமர்சிப்பது.. படத்தின் குறைகளை மட்டும் குறித்துக்கொள்வது.. தன் தளத்தில் தனக்கு புரிந்த கதையை அசட்டு நகைச்சுவையுடன் எழுதி ட்வீட்டரில் பகிர்வது.. இந்த ஆதார குறிக்கோளுடன் வருபவர்களுக்கு பியா போன்ற தேவதை தன்மை நிறைந்த கதாபாத்திரம், தாமஸ் பாவமன்னிப்பு பெறும் ஆன்மீக படிமங்கள், கிறிஸ்துவத்தின் சாயலில் அமைந்த வசனங்கள், ஊரை ஆசீர்வதித்து நகர்த்தி செல்லப்படும் இயேசு சிலை என எதுவும் புரிவதில்லை..

செந்தில் போன்ற சில அமெச்சூர் விமர்சகர்கள் கடலில் முத்தக்காட்சி நீக்கப்பட்டது குறித்து கோபப்படுகிறார்கள்.. இதுதான் இவர்கள் ரசனை.. இவர்களுக்கு தேவை இதுதான்.. அதற்கான படங்களுக்கு செல்லாமல் மணிரத்னத்தின் படங்களுக்கு ஏன் செல்கிறார்கள்? இவர்கள் விமர்சனம் செய்வது தவறு அல்ல.. படம் வெளியான முதல் நாளே பார்த்து, தனக்கு புரிந்த ஏதோ ஒன்றிரண்டு விஷயங்களை வைத்து விமர்சித்து, 3000, 4000 பேருக்கு பகிர்ந்து, அனைவரையும் அதன் கலையுணர்ச்சியை புரிய அல்ல உணர விடாமல் செய்யும் இந்த கலைக்கொலை எத்தகைய கொடுமையானது..

சுஜாதா சொன்னது போல் "மணிரத்னம்" மணிரத்னம் என்பதாலேயே அவரை நிராகரிக்க பலர் உள்ளனர். அது தான் இப்போது ஜெயமோகனுக்கும் நடக்கிறது.. முன்னோடிகளின் சிரமம்.. விளக்கை சுற்றி திரியும் விட்டில் பூச்சிகள் போல் தான் இவர்களை பற்றி எழுதும் விமர்சகர்களும்.. அவர்கள் ஒளியில் வாழ்ந்து, புகழில் எரிந்து சாபவர்கள்..