Wednesday 19 March 2014

IRUVAR Monologue..

In the memory of Faizel, sharing this epic monologue from Iruvar climax..
                                           


"என் அருந்தோழனே!
இதயத்து நண்பனே!
மாணிக்க மழையே!
மறைந்து விட்டாயா?

முன்னொரு பொழுதில்..
மீசை முளைக்கிற வயதில்..
ஒரிலையில் சோறுண்டோம்.
ஒரு பாயில் கண் வளர்ந்தோம்.

அந்த நினைவுகளின் கண்ணீரில், நெஞ்சுக்குழி நிறைகிறதே!

நம் கண்கள் வெவ்வேறு..
கனவுகள் ஒன்றுதான்!
நம் நெஞ்சம் வெவ்வேறு..
நினைவுகள் ஒன்றுதான்!
நம் கோட்டைகள் வெவ்வேறு..
கொள்கைகள் ஒன்றுதான்!

எதிலும் முந்தி வர துடிக்கும் முனைப்புள்ளவனே!
சாவிலும் என்னை முந்தி சரித்திரம் ஆயினாயோ?

என் வெற்றிக்கு மாலை தந்த கரம் எங்கே?
என் விழி நீரை சுண்டிவிட்ட விரல் எங்கே?
குழல் கொண்ட இசையாக கொஞ்சுகின்ற குரல் எங்கே?
என் முத்துவேல் வசனத்தை முத்தமிட்ட உதடு எங்கே?
என்னை ஊரெல்லாம் சுமந்து ஏற்றி வந்த தோள் எங்கே?

ஐயகோ!
இனி பார்க்கவே மாட்டாயா நண்பா?

எள்ளின் முனையளவும் இப்பொழுது கசப்பில்லை.
புல்லின் நுனியளவும் இப்பொழுது பகையில்லை.
மரணத்தை போல மனம் வெளுக்க மருந்தில்லை.

உன்னோடு ஒரு வார்த்தை பேசத்தான் நினைத்தேன்..
முடியவில்லை.

நலிந்து விட்ட உடல் வருடி நலம் கேட்க துடித்தேன்..
முடியவில்லை.

இன்று உன் ரோஜாப்பூ முகத்தில் முத்தமிட நினைக்கிறேன்.. முடியவில்லை.

முட்டி வரும் கண்ணீரை மூடிவிட நினைக்கிறேன்..
முடியவில்லை.

போய் வா நண்பா!
போய் வா!

உன் பக்கத்தில் எனக்கும் ஒரு படுக்கை விரித்து வை!
என்றேனும் ஒரு நாள் உன் அருகில் நான் வருவேன்.

இன்னொரு பொன்நேரம் என்னை தேடி வந்தால்..
காலம் ஒரு செங்கோலை என் கையில் தந்தால்..
உன் கனவும்..
என் கனவும்..
ஒரு பொழுதில் நிறைவேறும்.
உன் கல்லறையின் காதுகளில் நல்ல சேதி அரங்கேறும்!"

1 comment: