Thursday 13 February 2014

அழியாத கோணங்கள்..

"நீ இல்லாமல் எது நிம்மதி..
நீ தான் என்றும் என் சந்நிதி.. "

இரண்டு நாட்களுக்கு முன்பு ப்ரவீண் பிரசன்னாவும் நானும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பேசும் பொழுது எங்களின் அத்தனை ஆதர்ச இயக்குநர்களின் மேலும் ஏதேனும் ஒரு விதத்தில் எங்களுக்கு பிடிக்காத, அல்ல விரும்பாத விஷயங்கள் இருந்தன. மணிரத்னம் உட்பட.

நாங்கள் இருவரும் கருத்தொன்றி குறை சொல்ல முடியாத இயக்குநராக சிலாகித்தது பாலு சார் தான்! 

                                            


அந்த மனிதரின் வாழ்க்கை ஒரு முழுமையான கலைஞனால் வாழக்கூடிய வாழ்க்கை. அந்த பெயரே அந்த கலைஞனுக்காக செய்யப்பட்டதே! எத்தனை விருதுகள் - வீழ்ச்சிகள் - சரிவுகள் - சாபங்கள் பெற்ற பொழுதிலும் கலையும் காமிராவும் இவர் சொன்ன சொல்லுக்கு மறு சொல் சொல்லாமல் ஆடின!

எந்த தலைமுறைக்கும் சினிமா என்பது பொழுதுபோக்கு என்றே அறிமுகமாகிறது. பின் பாலு சார் போன்றவர்கள் அதன் மற்றொரு முடிவெளி இல்லாத வனாந்தரத்தை காட்டுகின்றனர். பாலு சாரின் படைப்புகள் ஆத்மார்த்தமானவையாக இருந்ததற்கு காரணமே அவரது வாழ்க்கை தானோ என்று நினைத்துக்கொள்வேன். அத்தனை நுட்பமான வாழ்வியல். சினிமாவை மட்டுமே சுவாசித்த வாழ்க்கை.

படைப்பின் அதீதமான தருணம் ஒரு ஆகச்சிறந்த படைப்பை உருவாக்குவது. அதனினும் உயர்ந்தது படைப்பாளிகளை படைப்பது. "ராமன் அப்துல்லா" எடுத்து ஐந்து வருடங்கள் கழித்து "ஜுலி கணபதி". "அது ஒரு கனாக்காலம்" பின் எட்டு வருடங்கள் கழித்து "தலைமுறைகள்"! வணிகம் கழுத்தில் கத்தி வைத்த நேரங்களில் எல்லாம் சினிமாவிற்கு வெற்றிமாறனையும், பாலாவையும், சசிகுமாரையும், ராமையும் பெற்று கொடுத்திருக்கிறார்.

அழகியலை அறிமுகம் செய்ததே பாலு சார் தான். ஒரு டூயட் என்பது நடனம் என்ற மரபை வலிந்து உடைத்தவர். புல்லில் அமர்ந்து கிடார் வாசிக்கும் பிரதாப் போத்தனை காதல் பொங்க ஷோபா பார்ப்பதில் தெரிந்த காதலும், அர்ச்சனாவின் கருவிழியும், மௌனிகாவின் சிரிப்பும், பிரியாமணியின் பார்வையும் வேறெந்த நேரத்திலும் எந்த இயக்குநராலும் பெற முடியாதவை.

சில நாட்களுக்கு முன் தலைமுறைகள் பற்றி எழுதியிருந்த போது 'கொட்டும் மழையில் தன் அத்தனை கட்டுப்பாட்டையும் மறந்த அந்த தாத்தா நனைவது.. மரணத்திற்கு முந்தைய கணங்கள் என்பதால் அது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.. அவரது முழுவாழ்வையும் பேரனுடன் நனைத்த அந்த மழை, சலவை செய்தது போல் இருந்தது.' என்று எழுதியிருந்தேன். தொப்பி இல்லாமல் பார்த்தறியாத பாலு சார் தன் முகமாக நடித்ததும் அந்த காட்சி இறுதியில் "தாத்தாவ மறந்துடாத.. தமிழையும் மறந்துடாத" என்பதும்.. அந்த படம் எதை நினைத்து பாலு சார் எடுத்திருப்பார் என்று யோசிக்கிறேன்.

சற்று முன்னம் ஒருவரின் இடுகையில் சொன்னது போல் 'பாலு சாரை பொறுத்தவரை RIP என்பது Rest in Photography என்றே பொருள் கொடுக்கிறது!

மௌனம் என்பதன் உருவம் பாலுமகேந்திரா வைக்கும் கோணத்தில் கட்டாயம் இருக்கும். சொக்கலிங்க பாகவதரோ சுப்பிரமணியோ.. இவரது காமிரா முன் காட்டிய மௌனம் அழியவே அழியாதவை.

சினிமாவின் மௌனமாகவே அவரது இழப்பு இருக்கப்போகிறது.

No comments:

Post a Comment