Thursday 27 February 2014

ஓ வசந்த ராஜா..!

இன்று காலை ஏதோ ஒரு சேனலில் 'ஓ வசந்த ராஜா..' பாடலை பார்த்தேன். முதல் முறை பார்க்கும் போதே சில பாடல்கள் அதன் வித்தியாசமான செய்நேர்த்திக்காக மனதில் பதிந்துவிடுகிறது. அப்படி வசீகரித்த ஒரு பாடல் இது. பாடலின் தொடக்கத்தில் நாயகன் மேல் சட்டையின்றி கடற்கரையில் படுத்திருப்பதும், அவனது முகமும் சட் சட்டென்று இசைக்கேற்ப காட்டப்படும். அப்படி ஒரு தொடக்கத்தை நான் அதுவரையோ, அதன் பின்னரோ வேறெந்த பாடலிலுமே கண்டதில்லை! அதீத காதல், seduction மற்றும் ecstasy - இதன் மையப்புள்ளி ஒன்றில் இந்த பாடல் இருக்கும். பல நாட்கள் கழித்தே இந்த பாடலை இயக்கி, ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திரா என்றறிந்தேன்!

படத்தில் இந்த பாடல் ஒரு மிக அழகான, குறும்பான, பாலுமகேந்திராத்தனமான தருணத்தில் இடம்பெறும். பாலு சார் படத்தில் அநேகமாக வரும் 'யோவ்.. ரொம்ப தான் பண்ணுறியே..' 'ஏன்யா..' என்ற செல்லமான காதல் வசனங்களே! பார்த்தவுடன் புன்னகைக்க வைப்பவை! அதன் நீட்சியாக நாயகன் அவளை தன் காதலி என அங்கீகரித்த ஒரு கணத்திற்கு பிறகு பாடல் இடம்பெறும்!

பாட்டின் இறுதி சரணம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் இலை மறை காய் கவிதையமைப்புக்காக.. ஜானகியின் பிரத்யேகமான குரலுக்காக.. சரணத்தின் கடைசி வரியில் (தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் 'பால் அபிஷேகம்..' என்ற வார்த்தை வரும் இடத்தில்..) இளையராஜா க்ஷண நேரத்தில் நடத்திடும் ஜாலத்திற்காக..

"ஆராதனை நேரம்..
ஆலாபனை ராகம்..
அலைபாயுதே தாகம்..
அனல் ஆகுதே மோகம்!
என் மேகமே வா வா!
இதழ் நீரைத் தூவு!
மன்மத கோயிலில் பால் அபிஷேகம்..
"

தமிழ் சினிமாவில் ஒரு நாயகனின் கனவுலகில் அவன் தன் காதலியை ரசிப்பதும், ஆராதிப்பதும், வர்ணிப்பதும் சலிக்க சலிக்க காட்டப்பட்டுள்ளது. அவன் காண விரும்பும் உடையில் தான் நாயகி நமக்கு காட்டப்படுவாள். அந்த வகையில் இந்த பாடல் ஒரு பெரும் புரட்சி. Path-breaking என்றே சொல்வேன். பாட்டு நாயகியின் கோணத்தில் நகர்கிறது. அவளது கனவில் அவள் காண விரும்பும் அவளது காதலன் பிம்பங்கள் நிறைந்து இயங்கும். அந்த பாடல் நெடுகிலும் பானுசந்தர் மேல் சட்டையின்றி, shorts அணிந்தோ - pant அணிந்தோ இருப்பார். பானுசந்தரை பார்க்கும்போதெல்லாம் அர்ச்சனா ஒரு காமத்தில் நனைத்த வெட்கத்தை முகத்தில் அணிந்திருப்பார். 

                                                                                         

உதாரணத்திற்கு கோவிலில் மேல் சட்டையின்றி - வேஷ்டி அணிந்து பானுசந்தர் நிற்பது போல் ஒரு காட்சி வரும். அப்போது பூஜை தட்டொன்றுடன் சந்நிதியில் இருந்து வெளிவரும் அர்ச்சனா அத்தனை வெட்கத்தை தன் கண்களிலும், சிரிப்பிலும் காட்டி தலையை குனிந்து கொள்வார். இது தான் பாட்டின் ஆதார கருவே. ஒரு ஆணால் தன காதலையோ - காமத்தையோ எளிதே வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய சமூகத்தில் அதிகம் பேசப்படாத, சொல்லபடாத பெண்ணின் காதலை - காமத்தை அவளது மனமாகவே சிந்தித்து காட்டியது பாலு சார் மட்டும் தான்!

http://www.youtube.com/watch?v=SYXN_BBvVac

No comments:

Post a Comment