Sunday 13 January 2013

Taj Mahal :: A review..

முன்னொரு நாள் பாரதிராஜாவின் "தாஜ்மஹால்" படம் கே டி.வியில் ஒளிபரப்பானது.. பல நாட்களாக பார்க்க நினைத்த படம்.. பாரதிராஜா இயக்க, மணிரத்னம் திரைக்கதை எழுத, வைரமுத்து பாடல்களும், ரஹ்மான் இசையும் என அனைத்து ஜாம்பவான்களும் ஒன்று சேர்ந்த படம்.. 1999ல் வெளியானது..  

                                         

இப்படத்தின் பாடல்கள் இப்போதும் விரும்பி கேட்கபடுகின்றன.. "சொட்ட சொட்ட", "கரிசல் தரிசல்", "ஈச்சி எலுமிச்சி", "குளிருது குளிருது" போன்ற பாடல்கள் தமிழ் இசையின் புத்ய பரிமாணத்தை திறந்தன.. மனோஜ், ரியா சென் அறிமுகமாகி நடித்த இந்த படம் ஒரு காதல் கதை..

திருப்பாச்சி, செங்குளம் என்ற இரு ஊருக்கும் பகை.. மாயன் திருப்பாச்சி.. மச்சகன்னி செங்குளம்.. தண்ணீருக்கு கீழே சந்திக்கும் இவர்கள் காதலிக்க தொடங்குகிறார்கள்.. மாயனின் அம்மாவாக ரேவதியும், அத்தையாக ராதிகாவும்,  மச்சகன்னியின் அம்மாவாக ரஞ்சிதாவும்   (பாரதிராஜாவின் மூன்று கண்டுபிடிப்புகள்) நடித்துள்ளனர்..  மாயனின் அப்பாவாக பலதார மணம் புரிபவராக மணிவண்ணன் வருகிறார்..

                                          

காதல் இரு ஊருக்கும் தெரிய பகை மூளுகிறது. மச்சகன்னிக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.. தன் தங்கை மகளையே மணம் செய்யும் மணிவண்ணனை நினைத்து ரேவதி உயிர் விடுகிறார்.. இதனால் மாயனால் திருமணத்தை நிறுத்த செல்ல முடியவில்லை.. இறுதியில் மச்சக்கன்னியின்  கணவனை கொன்று விட்டு அவரை காண செங்குளத்திற்கு ரயிலில் செல்கிறான்.. மச்சக்கன்னி மாயனை காண திருப்பாச்சி வருகிறாள். 

                                         

எதிரெதிர் ரயிலில் சந்தித்து கொள்ளும் இவர்கள் சேருகிறார்கள்.. ரயிலில் இருந்து இருவரும் குதிக்க ஆற்றுக்குள் விழுகிறார்கள்.. அப்போது முன்னொரு சமயம் இவர்கள் தண்ணீருக்குள் தவற விட்ட தாஜ்மஹால் மேலே வருவதோடு படம் முடிகிறது..

நல்ல திரைக்கதை, இசை, பாடல் என அனைத்துமிருந்தும்  இந்த படம் புகழ் பெறாததற்கு காரணம் முக்கிய கதாபாத்திரமான மனோஜ், ரியாவின் நடிப்பு.. மனோஜ் சில இடங்களில் அதிக ஹீரோயிசம் காட்டுகிறார்.. ரியாவின் நடிப்பில் நாடக தன்மை அதிகம்.. வசன உச்சரிப்பும் ஒழுங்காக இல்லை.. மற்றபடி பாரதிராஜாவின் அத்தனை முத்திரைகளும், கிராமத்து மண்வாசனையும் படத்தில் உள்ளன..

                                             

ரஹ்மானின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம்.. "கரிசல் தரிசல்" பாட்டு இப்படத்தின் சிறந்த பாட்டு என்பேன்.. சித்ராவின் குரலில் அப்பாட்டு தமிழில் வந்த பாடல்களில் ஒரு புதிய முயற்சி.. "பூகம்ப வேளையிலும் இரு வான்கோழி கலவி கொள்ளும்", "நீருக்கும்,  நமக்கும் ஒரு தேவ பந்தம்",  "மேகாட்டு மூலையில மேகம் இல்ல, மின்னல் இல்ல, பூமி நனஞ்சிருச்சி" போன்ற வரிகள் வைரமுத்துவின் அடையாளம் சொல்கின்றன..

                                                 

சில குறைகளை மறந்து பார்த்தால் இப்படம் ஒரு திறமையான கிராமத்து திரைக்கதைக்கு உதாரணம் எனலாம். 

No comments:

Post a Comment